இலங்கை வந்த சீனக்குழு-தூதுவர் தனிமைப்படுத்தலில்:ஏனையோர் நாட்டிற்குள்

வெளிநாட்டு இராஜதந்திரிகளின் விஜயங்களின்போது தனிமைப்படுத்தல் சட்டம் அவர்கள் மீது பாய்வதில்லை என்கிற விமர்சனங்கள் உள்ளநிலையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனத் தூதுவர் ட்சீ சென்ஹாங் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் உள்ள பிரதான பி.சி.ஆர் இயந்திரத்தில் ஏற்பட்டுள்ள கோளாறினை திருத்துவதற்காக விசேட சீனத்தூதுக் குழுவும் ஸ்ரீலங்காவுக்கு விஜயம் செய்துள்ளது.

இலங்கைக்கான சீன மக்கள் குடியரசின் புதிய தூதுவர் ட்சீ சென்ஹொங் (Qi Zhenhong) நேற்று இரவு கொழும்பை வந்தடைந்துள்ளார்.

ட்சீ சென்ஹொங் பி.சி.ஆர்.பரிசோதனையினை நிறைவு செய்து சீன ஈஸ்டன் ஏயார்லைன்சிற்கு சொந்தமான எம்.யு231 விமானம் மூலம் கட்டுநாயக்க விமானநிலையத்தினை வந்தடைந்ததாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

புதிய தூதுவர், அடுத்து வரும் இருவாரங்களுக்கு சுயதனிமைப்படுத்தலில் தன்னை ஈடுபடுத்தவுள்ளதாகவும் விமான நிலையத்தில் வைத்து வைபவரீதியான வரவேற்பினை இலங்கையின்; தற்போதைய நிலைமை கருதி மறுத்து விட்டதாகவும் சொற்ப அளவிலான சீன தூதரக இராஜதந்திர சேவையில் உள்ளவர்களே அவரை வரவேற்றும் நிகழ்வில் பங்கேற்தாகவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

1965ஆம் ஆண்டு பிறந்த இவர் 1988ஆம் ஆண்டு முதல் சீன இராஜதந்திர சேவையில் செயற்பட்டு வருகின்றார்.

அத்துடன் சீன சர்வதேச கற்கைகள் நிறுவனத்தின் தலைவரான இவர், பொருளாதார நிபுணர் என்பதோடு பீஜிங்கில் உள்ள இராஜதந்திர சேவைகளுக்கான பணியகத்தில் செயற்பாட்டு பிரதி பணிப்பாளராக செயற்பட்டுள்ளதோடு சீன பிரிட்டிஸ் கூட்டுக்குழுமத்தின் இரண்டாம் நிலை செயலாளராகவும் செயற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையில் பழுதடைந்துள்ள பிரதான பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரத்தை சரிசெய்ய சீன நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு நேற்றையதினம் இரவு இலங்கைக்கு வந்தனர்.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதுவரை செயலிழப்பிற்கான காரணம் தெளிவாக இல்லை என்றும், 7 நாட்களும் 24 மணித்தியாலமும் பல மாதங்களாக இயங்கிய பிற இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டு பராமரிக்கப்படும் என்றும் சீனத் தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

பி.சி.ஆர் இயந்திரத்தின் செயலிழப்பு காரணமாக, கிட்டத்தட்ட 20,000 பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

You May also like