பிள்ளையான் வீட்டில் நித்திரை? சபையில் தெரிவித்த சஜித் அணி

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்கிற சிவநேரத்துரை சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்திற்கு மத்தியில் சிறையில் இல்லாமல் அவர் வீட்டிற்கு சென்று நித்திரை கூடக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரான ஹேசா வித்தானகே நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,

“நாடாளுமன்றத்திற்கு மாத்திரம் வர அனுமதிக்கப்பட்டுள்ள சிறைவைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான், கடந்த 10ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார். அத்துடன் மறுதினம் 11ஆம் திகதி அவர் கோவில் ஒன்றின் திறப்பு நிகழ்வுக்கும் சென்று அதனை வைபவ ரீதியாக திறந்தும் வைத்தார். இன்று நாட்டில் இரண்டு சட்டங்கள் உள்ளன. பிள்ளையானுக்கு ஒருசட்டம், நாட்டு மக்களுக்கு இன்னுமொரு சட்டம். ஒருவேளை பிள்ளையான் அரச அனுமதியின் கீழ் தற்சமயம் வீட்டில் நித்திரை கொண்டாலும் கொள்வார்தான்” என்று தெரிவித்தார்.

 

You May also like