இன்று இரவு முதல் ரயில் வேலைநிறுத்தம்!

ரயில்வே ஊழியர்கள் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இந்த தகவலை ரயில் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ரயில் எஞ்சின் சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பலவற்றை சேர்ந்த ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மஹவ மற்றும் ஓமந்தைக்கிடையில் முன்னெடுக்கப்படவுள்ள ரயில் மார்க்க வேலைத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த நடவடிக்கையை  முன்னெடுக்கவுள்ளதாக ரயில் எஞ்சின் சாரதிகள் சங்கம் கூறியுள்ளது.

இதேவேளை, கட்டுநாயக்கவில் இருந்து புத்தளம் வரையான ரயில்சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தளம் ரயில் மார்க்கத்தின் குரன மற்றும் நீர்கொழும்பு ஆகிய  ரயில்நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி பணிகள் காரணமாக எதிர்வரும் 26 ஆம் திகதி முதல்  மூன்று நாட்களுக்கு ரயில்சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 26 ஆம் திகதி முற்பகல் 8.30 தொடக்கம் 28 ஆம் திகதி முற்பகல் 8.30 வரையான காலப்பகுதியில் குறித்த மார்க்கங்களில் ரயில்சேவை முன்னெடுக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் புத்தளம் மார்க்கத்திலான ரயில்சேவைகள்  கொழும்பு கோட்டை முதல் கட்டுநாயக்க வரை மாத்திரமே முன்னெடுக்கப்படும் என ரயில்வே பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

You May also like