இலங்கையில் மீன்பிடிக்க இந்தியாவுக்கு அனுமதியில்லை-இலங்கை அதிரடி அறிவிப்பு!

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கான அனுமதியை இந்தியா கடந்த 5 வருடங்களாக கோரி வருகின்ற போதிலும் அதற்கான அனுமதியை இதுவரை வழங்கவில்லை என்று மீன்பிடி இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மன்னார் பகுதிக்கு இன்று விஜயம் செய்தபோது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனைத் தெரிவித்தார்.

“சமூக ஊடகங்களில் வெளியாகும் தகவல்கள் அனைத்தும் உண்மையில்லை. இலங்கை அரசங்கம் இந்திய அரசாங்கத்துடன் கடந்த 5 வருடங்களில் 5 பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.தமது நாட்டு மீனவர்களுக்கு இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடி்ககையில் ஈடுபடுவதற்கான அனுமதியை இந்தியா கோரிய போதிலும் மேற்படி 05 கட்டப் பேச்சுவார்த்தையிலும் அதனை நாங்கள் நிராகரித்திருக்கின்றோம். இந்திய இலங்கை மீனவ விவகாரத்தில் அமைச்சு மட்டத்தில் நடத்தப்பட்ட பேச்சில், எல்லை நிர்வகிப்பதற்கான ஒரு பொறிமுறையை ஏற்படுத்தும்படி எம்மிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. விசேடமாக மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அரசாங்கமும் அதனை நிராகரித்தோம். இரண்டு விதமான நெருக்கடிகள் எமக்கு உள்ளன. இந்திய மீனவர்களின் பல படகுகள் அத்துமீறி வருகின்றன. பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் இங்கு உள்ளன. அதேபோல எமதுநாட்டு மீனவர்கள், படகுகள் இந்தியா வசம் உள்ளன. அவற்றை நிர்வகிப்பது குறித்து பேச்சு நடத்தியுள்ளோம். மேலும் இந்திய மீனவர்களால் அத்துமீறி, தடைசெய்யப்பட்ட மீன்பிடி நடவடிக்கையான ஆழ்கடல் ட்ரோலிங் முறையை தடுக்க இலங்கை கடற்படையினர், கடலோர பாதுகாப்பு படையினருக்கு அவர்களை கைது செய்யும்படி பணித்திருக்கின்றோம். அதேபோல, இலங்கை கடலில் மீன்பிடி நடவடிக்கையை மேற்கொள்ள எந்த வகையிலும் இந்தியாவிற்கு அனுமதியளிக்கவில்லை. எனினும் இந்திய தரப்பிலிருந்து கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்தே கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருவதோடு அதனை நிராகரித்தே நாங்கள் வருகின்றோம்”

You May also like