நாளை பஸ் சேவை இடம்பெறுமா? இன்று வெளியான தகவல்!

பொதுப் போக்குவரத்து தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு பாரிய எதிர்ப்பினை வெளிப்படுத்தவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு நாளை தளர்த்தப்படவுள்ள நிலையில் போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வழிகாட்டல் கோவை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்னவிடம் எமது  செய்திப் பிரிவு வினவிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

முதலாவது கொரோனா அலையின் பின்னர் உரிய நிவாரணக் கொடுப்பனவுகள் வழங்கப்பட்டால், 50 வீத பயணிகள் மாத்திரம் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பதற்கான திட்டம் ஒன்றை தாம் அரசாங்கத்திடம் முன்வைத்ததாகவும், அரசாங்கம் அது தொடர்பில் பாராமுகமாக செயற்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், அரசாங்கம் தற்போது எரிபொருள் விலை அதிகரிப்பினை மேற்கொண்டுள்ளதுடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தமக்கு எவ்வித நிவாரண கொடுப்பனவினையும் வழங்காது 50 வீதமான பயணிகளுக்கு மாத்திரம் போக்குவரத்து சேவையினை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் நாளைய தினம் பொது போக்குவரத்து சேவையில் தனியார் பேருந்துகளை ஈடுபடுத்துவது நிச்சயமில்லை எனவும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்தார்.

இதேவேளை, பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுகின்ற போதிலும், மாகாணங்களுக்கிடையிலான பொதுப் போக்குவரத்து இடம்பெறாது என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் மாகாணத்திற்குள் மாத்திரம் வரையறுக்கப்பட்ட பொதுப் போக்குவரத்து சேவை இடம்பெறும் என சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டல் கோவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பொதுப் போக்குவரத்தின் போது ஆசன எண்ணிக்கையில் 50 வீதமான பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் மேல் மாகாணத்தில் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் பொதுப் போக்குவரத்து சேவையை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

You May also like