இலங்கையை அவதானிக்கும் இந்திய விமானங்கள்- தயார் நிலையில் இலங்கை!

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் எழுந்துள்ள பூகோள அரசியலுடன் தொடர்புடைய பிரச்சினைகள் தொடர்பாக இராஜதந்திர ரீதியாக கலந்துரையாட அரசாங்கம் தயாராகி வருவதாக அமைச்சரவைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சீனாவின் செயற்பாடுகள் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும், இலங்கையை அண்மித்த பகுதிகளில் இந்தியா ட்ரோன் விமானங்கள் மூலம் கண்காணிக்க தயாராகுவதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

இதுதொடர்பாக இன்று புதன்கிழமை நடந்த அமைச்சரவை ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேற்படி தெரிவித்துள்ளார்.

இலங்கையை ட்ரோன் மூலம் கண்காணிப்பது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைய மாட்டாதா? என்றும் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கையில் சீனாவின் திட்டங்கள் தொடர்பாக இந்தியாவின் கரிசனைகள் இராஜதந்திர ரீதியாகவே கலந்துரையாடப்பட வேண்டும் என்று அமைச்சர் கெஹெலிய பதிலளித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக வெளியுறவு அமைச்சு இராஜதந்திர முன்னெடுப்புகளை ஆராய்ந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

You May also like