எட்டியாந்தோட்டையில் மக்கள் ஆர்ப்பாட்டம்-காரணம் இதுதான்!

கேகாலை – எட்டியாந்தோட்டை – லெவண்ட் தோட்டத்தில் மண்சரிவு அபாயத்தினால் பாதிக்கப்பட்டு, தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள், பெருந் தோட்ட அதிகாரிகளுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று முற்பகல் நடத்தப்பட்டது.

தமக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 25 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

லெவண்ட் தோட்டத்தில் காணப்பட்ட மண்சரிவு அபாயத்தை அடுத்து, இந்த மக்களை தோட்ட நிர்வாகம் பாதுகாப்பாக இடமொன்றில் தங்காலிய கூடாரங்களை அமைத்து தங்க வைத்துள்ளது.

எனினும், மழையுடனான வானிலை முடிவடைந்ததை அடுத்து, மீண்டும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிக்கு செல்லுமாறு தோட்ட நிர்வாகம் வலியுறுத்தியதுடன், அதற்கு மறுப்பு தெரிவித்த மக்களுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் தோட்ட நிர்வாகம் முறைப்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில், பயணக் கட்டுப்பாடு காணப்பட்ட சந்தர்ப்பத்தில் சுமார் 12 கிலோமீற்றர் தூரம் பொலிஸ் நிலையத்திற்கு நடந்து சென்று வாக்குமூலம் வழங்கிய இந்த மக்கள், மீண்டும் 12 கிலோமீற்றர் தூரம் நடந்து வந்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ள மக்களுக்கு தொழிலை வழங்க தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ள பின்னணியில், மக்கள் பாரியளவில் தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமக்கான உரிமையை கோரி, மக்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக எமதுசெய்தியாளர் தெரிவிக்கின்றார்.

நன்றி – ட்ரூசிலோன்

You May also like