சுனில் ரத்நாயக்க விடுதலையை எதிர்த்த மனுவை விசாரித்த குழுவிலிருந்து ஒருவர் விலகல்

2000மாம் ஆண்டு யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் இடம்பெற்ற படுகொலை வழக்கில் மரண தண்டனையை அனுபவித்துவந்த இராணுவ கோப்ரல் சுனில் ரத்நாயக்கவுக்கு வழங்கப்பட்ட விசேட ஜனாதிபதி பொதுமன்னிப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யும் நீதியரசர்கள் குழாமிலிருந்து ஒருவர் இன்று விலகியிருக்கின்றார்.

உச்சநீதிமன்றில் இந்த அடிப்படை மனிதவுரிமை மீறல் மனு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்களாகிய மூர்த்து பெர்ணான்டோ, அச்சல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன உள்ளிட்டவர்கள் தலைமயில் இன்று விசாரணை நடந்தபோது,   தனிப்பட்ட சில காரணங்களுக்காக இந்த வழக்கு விசாரணைக் குழாமிலிருந்து தாம் விலகுவதாக நீதியரசர் மூர்த்து பெர்ணான்டோ அறிவித்தார்.

இந்நிலையில் மனுமீதான பரிசீலனை செப்டம்பர் 11ஆம் திகதிவரை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் உட்பட சில தரப்பினர் இணைந்து இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

You May also like