800 திரைப்படம் நிச்சயம் வரும்- விஜய் சேதுபதி நடிப்பாரா? முரளிதரன் அதிரடி தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 800 திரைப்படம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கொரோனா தொற்று அச்சுறுத்தல் குறைந்ததன் பின்னர் அந்தத் திரைப்படம் வெளியிடப்படவுள்ளதாக பிரபல சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று இரவு அளித்த நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இந்தத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி இனி நடிக்கமாட்டார் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது,

“நிச்சயமாக அந்தத் திரைப்படம் வெளிவரும். கொரோனா தொற்று அச்சறுத்தல் நெருக்கடி காரணமாகவே அந்தத் திரைப்படம் பாதியில் நின்றுவிட்டது. இந்தத் திரைப்படத்திலிருந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நின்றுவிடுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அவருக்கு அதிகளவான அழுத்தங்கள் வந்த காரணத்தினால் அவருக்கு அப்படியான வேண்டுகோளை நான் முன்வைத்தேன். நாட்டில் இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒருபக்கத்தில் உள்ளவர்கள் நான் சிங்களவன், தமிழன் அல்ல என்றும், இன்னுமொரு தரப்பினர் மற்ற வகையிலும் சிந்திக்கின்றனர்.

நான் தமிழ் மொழி பேசுவதில்லை என்றும்கூட விமர்சிப்பதை ஏற்கமுடியாது. நான் அதிகமான ஊடகங்கள் முன்பாக வருவதில்லை என்றும் கூறுகின்றனர். முதலில் நான் இலங்கைப்பிரஜை. அதற்கடுத்த பின்னர்தான் இனம், மதம். யார் என்ன அச்சறுத்தினாலும் உண்மை இதுதான். அதனால்தான் நான் ஒரு அறக்கட்டளையை ஆரம்பித்து இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மக்களுக்கு உதவிசெய்துவருகின்றேன். வாழ்க்கை என்பது குறுகிய காலம். அந்த வகையில் கோவிட் தொற்று அச்சறுத்தல் முடிந்ததன் பின்னர் 800 திரைப்படம் திரைக்கு வரும். 7 மொழிகளில் திரையிடப்படும்.

திரைக்கதை என அனைத்தும் முழுமைப்பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் 99 வீதமானவர்கள் இலங்கையர்கள்தான். பிரதான நடிகர் இந்தியாவிலிருந்துதான் அழைக்கப்பட வேண்டிய எதிர்பார்ப்பு இருக்கின்றது. நடிகைக்கான சந்தர்ப்பத்தை இலங்கையில் ஒருவருக்கு வழங்க எதிர்பார்க்கின்றேன். இலங்கையில் உள்ள நடிகை ஒருவரை உலகிற்கு அறிமுகஞ்செய்வதால் சர்வதேசம் வரை சென்று திறமையை வெளிகொண்டுவர முடியும்” எனத் தெரிவித்தார்.

You May also like