இலங்கையில் மேலும் இருவருக்கு டெல்டா தொற்று!

கொரோனா திரிபடைந்த டெல்டா தொற்றுக்கு இலக்கான மேலும் இருவர் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்த இருவரில் ஒருவர் கம்பஹா – தொம்ப்பே பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றைய நபர் எந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்கிற தகவல் வெளிவரவில்லை. அவரது மாதிரி கொழும்பு பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் டெல்டா தொற்றிருப்பது உறுதியாகியது.

எவ்வாறாயினும் தொம்ப்பே பிரதேசத்தில் இனங்காணப்பட்ட டெல்டா தொற்றாளர், இலங்கையை கடற்படையைச் சேர்ந்தவர் என்றும் பூஸா கடற்படை முகாமிலிருந்து அவர் கடந்த 26ஆம் திகதி திரிவாகாகந்த பகுதியிலுள்ள தனது இல்லத்திற்கு வந்து பின்னர் 28ஆம் திகதி மீண்டும் கடற்படை முகாமுக்குச் சென்றிருப்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், குறித்த கடற்படை சிப்பாயின் பிரதேசத்தில் இருந்து இதுவரை 179 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களது மாதிரிகள் தற்போது டெல்டா பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் டெல்டா திரிபடைந்த தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இன்றுடன் 21ஆக உயர்ந்துள்ளது.

கொழும்பு – தெமட்டகொடவில் 5 டெல்டா தொற்றாளர்கள் ஆரம்பத்தில் இனங்காணப்பட்டிருந்ததோடு, பின்னர் கொழும்பு மாநகர சபை பிரதேசம், காலி, மாத்தறை என பலஇடங்களிலும் 14  டெல்டா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like