பஷிலை சந்திக்க மைத்திரி அணி தீர்மானம்

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுடன் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர்கள் கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவை மேற்கோள் காட்டி சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஜனாதிபதி ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்புக்குப் பின்னர், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர்கள், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவை சந்தித்துக் கலலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடவுள்ள விடயங்கள் குறித்து இப்போதே கூற முடியாது என குறிப்பிட்ட அவர், ஜனாதிபதியை சந்திப்பதற்கு காரணமொன்று அவசியமில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்திற்கு வந்துள்ள சிறு குழந்தைகள் வெளியிடும் கருத்துக்களை பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை எனவும், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like