இஷாலினிக்கு நீதிகேட்டு டயகம மக்கள் ஆர்ப்பாட்டம்!

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக சேவையாற்றிய போது, எரிகாயங்களுடன் உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கோரி அவருடைய சொந்த ஊரான டயகமவில் இன்று  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

டயகம தோட்ட தொழிலாளர்கள் டயகம நகரில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதற்கு முன்னரும் இதுபோன்ற பல சம்பவங்கள் பெருந்தோட்டங்களில் இடம்பெற்றுள்ள நிலையில்  அவற்றுக்கு இதுவரை நியாயம் கிடைக்கவில்லை என ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.

எனவே பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்களை இவ்வாறு தொழிலுக்கு அமர்ந்துவோர் தொடர்பில் கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவர்களுக்கு தகுந்த தண்டணை வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டகாரர்கள் வலியுறுத்தினர்.

டயகம பகுதியில் உள்ள பல தோட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பதாகைகளை ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டதுடன் உயிரிழந்த 16 வயது சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்டவர்கள் தராதரம் பாராது கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என கோரினர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டுப்பணிப்பெண்ணான குறித்த சிறுமி கடந்த ஜூலை மாதம் 3 ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 16 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்

இதேவேளை குறித்த சிறுமி நீண்டகாலமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டயகம பகுதியைச் சேர்ந்த இசாலினி ஜூட் என்ற 16 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.

You May also like