மீண்டும் திருமணங்கள் நடத்த தடையா?

தனிமைப்படுத்தல் மற்றும் வழங்கப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வுகள் நடத்தப்படும் பட்சத்தில், நாளைய தினம் முதல் அதற்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.

திருமண நிகழ்வுகளை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, திருமண நிகழ்வுகளை நடத்தும் விதம் குறித்து பல்வேறு முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் நடத்தப்பட்ட திருமண நிகழ்வுகள் தொடர்பில் நேற்று மற்றும் இன்றைய தினங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாகவும், பெரும்பாலான நிகழ்வுகள் சுகாதார வழிமுறைகளை மீறி இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனால், நாளைய தினம் முதல் நடத்தப்படும் அனைத்து திருமண நிகழ்வுகள் குறித்தும் தாம் அவதானம் செலுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

சுகாதார வழிமுறைகளை மீறி நடத்தப்படும் திருமண நிகழவுகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுக்கின்றார்.

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமை தொடர்பில் கவனம் செலுத்தி திருமண நிகழ்வுகளை நடத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்வாறான விதத்தில் திருமண நிகழ்வுகள் நடத்தப்படும் பட்சத்தில், பல்வேறு கொவிட் திருமண கொத்தணிகள் உருவாவதற்கான சாத்தியம் காணப்படுவதாக உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.

இந்த நிலைமை தொடருமாக இருந்தால், திருமண நிகழ்வுகளை நடத்த எதிர்காலத்தில் தடை விதிக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.

You May also like