இஷாலினி மரணம் – ரிஷாட் குடும்பத்தினருக்கு ஓகஸ்ட் 9 வரை மறியல்!

16 வயது சிறுமி தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை, மனைவியின் சகோதரன் மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு புதுகடை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் சிறுமியை வேலைக்கு அழைத்து வந்த இடைதரகர் ஆகியோர் கடந்த 23ம் திகதி அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் மற்றுமொரு பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரனும் அன்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் முதற்தடவையாக கடந்த 24ம் திகதி புதுகடை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்ததுடன், சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை நடத்த நீதவான் அன்றைய தினம் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இவ்வாறு 48 மணிநேர விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் இன்றைய தினம் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

You May also like