இஷாலினி விவகாரம்-பொலிஸ் உயரதிகாரி விரைவில் கைது?

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்து வந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமாக உயிரிழந்த ஹிஷாலினியின் மரணத்தை மறைப்பதற்காக, சிறுமியின் குடும்பத்தாருக்கு அழுத்தங்களை பிரயோகித்ததாக கூறப்படும் பொலிஸ் தலைமையகத்தில் கடமையாற்றும் உயர் பொலிஸ் அதிகாரியொருவரை கைது செய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

“அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மிக முக்கியமானவர்கள். அவர்கள் இவ்வாறு செய்ய மாட்டார்கள். இந்த பிரச்சினையை தொடர்ந்து கொண்டு செல்ல தேவையில்லை. இந்த பிரச்சினையை பொலிஸிற்கு கொண்டு செல்ல வேண்டிய தேவையில்லை. 50 ஆயிரம் ரூபாவை வாங்கி தருகின்றேன். இந்த பிரச்சினையை இதனுடன் நிறுத்திக்கொள்வோம்” என குறித்த பொலிஸ் உத்தியோகத்தர், சிறுமியின் குடும்பத்தாருக்கு அழுத்தங்ளை பிரயோகித்துள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த உயிரிழப்பு மர்மமான உயிரிழப்பு என வாக்குமூலம் வழங்காது, தற்கொலை என கருதி, இந்த பிரச்சினை முடித்துக்கொள்ளும் வகையில், சிறுமியின் சகோதரன் உள்ளிட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரிய வருகின்றது.

சிறுமி உயிரிழந்த பின்னர், சிறுமியின் சகோதரன் உள்ளிட்ட உறவினர்களினால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலத்தில் இந்த விடயம் தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவ்வாறான பின்னணியில், குறித்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விசாரணைகளில், பொலிஸ் தலைமைகயத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகராக பணிப் புரியும் நவாஸ் என்ற பொலிஸ் அதிகாரியினாலேயே இந்த அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இந்த பொலிஸ் அதிகாரியின் தொலைபேசி அறிக்கை தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாகவும், எதிர்வரும் தினங்களில் சந்தேகநபரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

ரிஷாட் பதியூதீனின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாக குறித்த நபர் சிறிது காலம் பணிப் புரிந்து வந்துள்ளதுடன், ரிஷாட்டின் உறவினர்களுடன் இவர் நெருங்கிய தொடர்பை பேணி வந்துள்ளதாக தெரிய வருகின்றது.

ஹிஷாலினிக்கு தீ காயங்கள் ஏற்பட்ட பின்னர், குறித்த பொலிஸ் அதிகாரிக்கு, ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தை தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு விடயங்களை தெரிவித்துள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதன்பின்னர், குறித்த பொலிஸ் அதிகாரி, ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு சென்று விடயங்களை ஆராய்ந்துள்ளமையும் விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

அதையடுத்தே, இந்த நபர், ஹிஷாலினியின் உறவினர்களுடன் பேசி, அழுத்தங்களை பிரயோகித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

சாட்சியாளர்களுக்கு அழுத்தங்களை பிரயோகித்தல், இலஞ்சம் வழங்க முயற்சித்தமை உள்ளிட்ட மேலும் பல குற்றச்சாட்டுக்களின் கீழ், குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

You May also like