அட்மிரல் கரன்னாகொட மீது விசாரணை வேண்டாம் என சட்டமா அதிபர் கோரிக்கை

கொழும்பு மற்றும் தெஹிவளை பிரதேசங்களில் தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட விவகார வழக்கில் கடற்படையின் முன்னாள் தளபதியான அட்மிரல் வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்தும் விசாரணை செய்ய முடியாத நிலைமை உள்ளதாக நீதிமன்றத்தில் இன்று புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் கொழும்பில் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 14ஆவது பிரதான சந்தேக நபராக கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளார்.

இந்நிலையில், அட்மிரல் கரன்னாகொடவினால் தன்னை சந்தேக நபர் பட்டியலில் இருந்து நீக்கும்படி கோரும் மனு மேற்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு உள்ளதால் அவர் மீதான வெள்ளை வான் கடத்தல் விசாரணைகளுக்கு இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்கும்படி நீதியரசர்களான ஜானகீ ராஜகருணா, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் தலைமையிலான மூவரடங்கிய கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின்போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய சிரேஸ்ட சட்டத்தரணி ஜனக்க பண்டார தெரிவித்தார்.

 

You May also like