இஷாலியின் மரணம் – முதல்தடவையாக அறிவிப்பை வெளியிட்டார் ரிஷாட்!

என்னுடைய வீட்டிலே பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த தங்கை ஹிசாலினியின் மரணம் எனக்கும் எனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் மிகுந்த மனைவேதனையை அளித்திருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

என்னுடைய சகோதரி 34 வயதில் புற்றுநோயால் இறந்த போது எவ்வாறான துன்பத்தையும் வேதனையையும் தந்ததோ அதே போன்றதொரு வேதனையைத்தான் ஹிசாலினியின் மரணமும் எனது குடும்பத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

16 வயது பூர்த்தியடைந்த பின்னர் தான் ஹிசாலினி எங்களுடைய வீட்டிற்கு வேலைக்காக தரகர் ஒருவரின் மூலம் வந்தார்.

அவர் பணிக்கு வரும்போது சிறுமியின் தாயாரோ குடும்பத்தாரோ வந்து சிறுமி யாரின் வீட்டில் பணி புரிய போகின்றார் அவரின் தங்குமிடம் எவ்வாறு உள்ளது என்பதை அவதானித்துச் செல்லவில்லை.

எவ்வாறெனினும் ஒரு தனிநபர் வாழ்வதற்கான அறை, அதற்கு அருகில் குளியலறையோடு ஒழுங்கான கட்டமைப்போடு அவருக்கு வீட்டு ஏற்பாட்டை நாங்கள் செய்து கொடுத்திருக்கின்றோம்.

கடந்த பத்து வருட காலமாக அங்கு பணியாற்றுபவர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். குறித்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி 6.45 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.

எனது மாமனாரும் அவரின் மனைவியும் உறங்கச் சென்ற வேளை இந்த சிறுமியின் கதறல் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது சிறுமி தீப்பற்றிய நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி நடுநிலையான விசாரணைகளை நடத்தும்படியும் ரிஷாட் பதியூதீன் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் வலியுறுத்தினார்.

You May also like