மருத்துவமனைகளில் விடவும் சமூகத்தில் தொற்றாளர்கள் அதிகம்-மருத்துவர்கள் எச்சரிக்கை..!

வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெறுகின்ற கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை விட பல மடங்கிலான தொற்றாளர்கள் சமூகத்தில் இருக்கலாம் என்று இலங்கை மருத்துவச்சங்கத்தின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் டாக்டர் பத்மா குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக முடிந்தளவு மக்கள் வெளியே அநாவசியமாக நடமாடுவதைத் தவிர்த்துக் கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போது இலங்கையிலுள்ள அரச மருத்துவமனைகளில் கோவிட் தொற்றாளர்கள் அனுமதிக்கப்படுவது அதிகரித்திருப்பதால் சில வைத்தியசாலைகள் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளன.

குறிப்பாக சிரச ஊடகத்தின் ஊடகவியலாளர் திலக்ஷனி மதுவந்தி, இன்று வியாழக்கிழமை அதிகாலை முகநூலில் பதிவொன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவரது குறிப்பில், இந்தியாவில் நடந்த சம்பவத்தை செய்தியாக வாசித்த நான், தற்போது அதே நிலைமையை கொழும்பு களுபோவில வைத்தியசாலையில் பார்க்கின்றதாக தெரிவித்துள்ளார்.

பலர் வைத்தியசாலைக்கு வெளியே உள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்ததை கண்முன்னே கண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

You May also like