இஷாலினி விசாரணை இரகசியங்கள் ஊடகங்களுக்கு கிடைத்தது எப்படி. விசாரணை தீவிரம்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட்டின் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ்ச் சிறுமி பற்றிய விசாரணைகள் நடத்தப்பட்டு மன்றில் அறிக்கை தாக்கல் செய்யும்முன் அதிலுள்ள விடயங்கள் எப்படி ஊடகங்களுக்கு சென்றது என்ற விவகாரம் குறித்து விசேட விசாரணை நடத்தப்படவுள்ளது.

இந்த விசாரணைக்கான கோரிக்கையை இஷாலினியின் மரணம் பற்றிய வழக்கு இன்று திங்கட்கிழமை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி ரஜிந்திரா ஜயசூரிய முன்பாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் பிரசன்னமாகியிருந்த பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப்ப பீரிஸ், இந்த வழக்கில் விசாரணை செய்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்யமுன் அதிலுள்ள விடயங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்பட்டது எப்படி என்பதை விசாரணை நடத்தும்படி நீதிமன்றில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், காவல்துறைமா அதிபருக்கு இந்த விவகாரம் பற்றி விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்கும்படி உத்தரவிட்டது.

அதேவேளை. முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி உள்ளிட்ட நால்வரினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நான்கு சந்தேகநபர்களையும் எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் இன்று  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த ஹிஷாலினி, மர்மமான முறையில் தீ காயங்களுடன் கடந்த மாதம் மூன்றாம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, கடந்த மாதம் 15ம் திகதி உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் ரிஷாட் பதியூதீனின் மனைவி, மனைவியின் தந்தை மற்றும் இடைதரகர் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதன்பின்னர், ரிஷாட் பதியூதீனின் வீட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் யுவதியொருவரின் பாலியல் துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில், ரிஷாட் பதியூதீனின் மனைவியின் சகோதரன் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கான மறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May also like