கோவிட் தடுப்பூசி பெறாத 79 எம்.பிக்கள்- ஒரே நாட்டில் இரு சட்டமா?

நாடாளுமன்றத்தில் கொரோனா வைரஸிற்கு எதிரான எந்தவித தடுப்பூசியையும் பெறாத 79 உறுப்பினர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 225 உறுப்பினர்கள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்தில் இதுவரை 146 உறுப்பினர்களே கோவிட் தடுப்பூசியைப் பெற்றிருப்பதாக நாடாளுமன்ற தகவல் பிரிவு அதிகாரியை மேற்கோள்காட்டி ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அமெரிக்காவின் மொடர்னா, பைஸர் போன்ற தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் விபரங்கள் எதுவும் பதிவில் இல்லை என்றும், ஸ்புட்னிக் மற்றும் எஸ்ட்ரா செனிகா ஆகிய தடுப்பூசிகளைப் பெற்றவர்கள் பட்டியலில்தான் 146 பேரும் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேற்படி தகவல்கள் அனைத்தும் ஓகஸ்ட் 12ஆம் திகதிவரையானவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதிக்குப் பின்னர் கோவிட் தடுப்பூசி அட்டையின்றி எவரும் பொது இடங்களுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று இராணுவத் தளபதியும், கோவிட் ஒழிப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அண்மையில் அறிவிப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May also like