86 வயதில் 10ஆம் ஆண்டு பரீட்சையில் தோற்றிய முன்னாள் முதல்வர்!

புதுடில்லி ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு தற்போது 86 வயதாகின்ற நிலையில் அவர் 10ஆம் வகுப்பு ஆங்கிலப் பரீட்சையை எழுதியுள்ளார்.

ஹரியானாவில் கடந்த 1999 முதல் 2005 வரை, இந்திய தேசிய லோக்தள கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, ஹரியானா முதல்வராக இருந்த போது, ஆசிரியர்கள் தேர்வாணையத்தில் முறைகேடுகள் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், சவுதாலாவுக்கு டில்லி நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் 2013ல் உறுதி செய்தது. 

டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுதாலா, கடந்த 2017 தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனத்தில் சேர்ந்து, 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்.

இதில் ஆங்கிலத்தை தவிர மற்ற பாடங்களில் சவுதாலா முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.

இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் தண்டனை முடிந்து, சவுதாலா சிறையிலிருந்து வெளியே வந்தார். ஹரியானா திறந்த நிலை கல்வி வாரியம் வாயிலாக அவர், 12ஆம் வகுப்பு தேர்வையும் எழுதினார்.

ஆனால், 10ம் வகுப்பு ஆங்கில பரீட்சையில் அவர் தேர்ச்சி பெறாததால், அவருடைய, 12ம் வகுப்பு தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில், சவுதாலா சிர்சா மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில், 10ம் வகுப்பு ஆங்கில தேர்வை எழுதினார். கையில் எலும்பு உடைந்துள்ளதால், கேள்விகளுக்கு அவர் கூறிய பதில்களை, மற்றொருவர் எழுதினார்.

You May also like