ஈஸ்டர் தாக்குதல்- இலங்கைக்கு விசாரணைக் குழுவை அனுப்புகிறது ஐ.நா?

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாத தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் குழுவொன்று நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

புனித பாப்பரசரினால் இதுகுறித்து விசேட தகவல் ஒன்று விரைவில் ஐக்கிய நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகமொன்று பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களில் 250ற்கும் அதிகமானவர்கள் பலியானதுடன், 500ற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

இது தொடர்பிலான விசாரணைகளை நடத்திவருகின்ற இலங்கை அரசாங்கம் மீது நம்பிக்கையில்லை என்று தெரிவித்துவரும் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகை, அண்மையில் புனித பாப்பரசருக்கு கடிதமொன்றையும் அனுப்பி வைத்திருந்தார்.

குறித்த கடிதம் குறித்து பாப்பரசர் கவனம் செலுத்தியுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லம் அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையிலேயே பாப்பரசர் குறித்த கடிதம் பற்றியும், உயிர்த்த ஞாயிறு தினத் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பாகவும் விசேட அறிக்கையொன்றை ஐக்கிய நாடுகள் சபைக்கு அனுப்பிவைக்கவுள்ளார் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அவ்வாறு பாப்பரசர் அறிக்கையொன்றை ஐ.நாவுக்கு அனுப்பிவைத்தவுடன் விசாரணை நடத்துவதற்கான கவனத்தை ஐக்கிய நாடுகள் சபை செலுத்தும் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து குழுவொன்றை அமைத்து அந்தக் குழுனை இலங்கைக்கு அனுப்பிவைக்க ஐ.நா நடவடிக்கை எடுக்கலாம் என்றும் ஆருடம் வெளியிடப்பட்டுள்ளது.

You May also like