பெற்றோல் தட்டுப்பாடு என்று கூறிய பாலித்த இன்று நீதிமன்றுக்கு!

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்ட பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

எரிபொருள் நிலைமை தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதையடுத்து அவர் நேற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளதாகவும், கையிருப்பில் உள்ள டீசல் 11 நாட்களுக்கும், பெற்றோல் 10 நாட்களுக்கும் மாத்திரமே போதுமானதாகும் என இலங்கை பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த அண்மையில்  தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நாட்டில் எரிபொருளுக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என விடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில, ட்விட்டர் பதிவொன்றில் தெரிவித்தார்.

ஏதாவது ஒரு வகையில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படுமாயின், அது குறித்து பொதுமக்களுக்கு தாம் அறியப்படுத்துவதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றிற்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம், அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்திருந்தது.

பெற்றோலிய பொது சேவையாளர் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்த பாலித்த வெளியிட்டிருந்த தகவலில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என அந்த கூட்டுத்தாபனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May also like