ஆப்கானில் சிக்கிய 86 இலங்கையர்கள்;46 பேர் திரும்பினர்-20 பேரின் நிலை?

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலைமை தொடர்பில் இலங்கை அரசாங்கம் மிக உன்னிப்பாக அவதானித்து வருவதாக  வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்ட விசேட அறிக்கை ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்தும் அவர்களை மீள இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பிலும் அவதானம் செலுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா, பிரித்தானியா, பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளிடமும் ஐக்கிய நாடுகள் சபையிடமும் ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களை மீள அழைத்து வருவது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் சம்பந்தப்பட்ட தூதுவர்களுடனான சந்திப்பின் போது ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களுக்கு உதவுமாறு கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த நோக்கத்திற்காக தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்த 86 இலங்கையர்களில் 46 பேர் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், மேலும் 20 பேர் விரைவில் வெளியேற்றப்படவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் எஞ்சிய 20 பேரும் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுமன்னிப்பு வழங்கவும் வெளிநாட்டவர்களை துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்காமல் இருப்பதற்கும் தலிபான்கள் உறுதியளித்துள்ளமைக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள இலங்கை அரசாங்கம், அந்த உறுதியை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறும் கோரியுள்ளது.

அத்துடன் இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பின்பற்றி ஆப்கானிஸ்தானில் பெண்கள் வேலை செய்யலாம் எனவும் பெண்கள் பாடசாலைகளுக்கு செல்லலாம் எனவும் தலிபான்கள் அளித்த உறுதிமொழிகளைக் கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அனைத்துக் கட்சி பொறிமுறையொன்றை உருவாக்கவுள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளமையை இலங்கை அரசாங்கம் கவனத்திற் கொண்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் தற்போது தலிபான்கள் ஆட்சியில் இருப்பதன் காரணமாக, சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை உறுதிப்படுத்தவும், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பு, கௌரவத்தை பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாரிய அளவிலான இடம்பெயர்வு, முழு தெற்காசிய பிராந்தியத்திலும் சீர்குலைக்கும் விளைவை ஏற்படுத்தும் நடவடிக்கைகளான பாதுகாப்பான புகலிடத்தைக் கண்டுபிடிக்க முயலும் தீவிரவாத மதவாத குழுக்கள் மற்றும் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகத்தின் அதிகரிப்பு ஆகியன தொடர்பில் இலங்கை அவதானித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் நிலைமை தொடர்பில் நாளாந்தம் இலங்கை அரசாங்கம் அவதானித்து வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை சார்க் அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் இந்த விடயம் தொடர்பான எந்தவொரு பிராந்திய ரீதியான முயற்சிகளுக்கும் தனது ஒத்துழைப்பை வழங்க இலங்கை தயாராக உள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like