தடுப்பூசி இல்லாமல் தடுமாறும் மலையக மக்கள்-அவல நிலைக்கு எப்போது தீர்வு?

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி ஏற்றப்படுவது கட்டாயமென அரசாங்கம் அறிவித்து வருகின்ற நிலையில் தடுப்பூசி ஏற்றாமல் தாம் புறக்கணிக்கப்படுவதாக மடக்கும்புர மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கொத்மலை  சுகாதார பிரிவிற்கு உட்பட்ட மடக்கும்புர தோட்டத்தில் இதுவரை முதராவது தடுப்பூசி கூட ஏற்றப்படாத நலை காணப்படுகின்றது .

இது தொடர்பில் மடக்கும்புர மக்கள் குறிப்பிடுகின்ற போது மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில் முதல்கட்ட தடுப்பூசி ஏற்றப்பட்டு இரண்டாவது தடுப்பூசியும் ஏற்றப்பட்டு விட்டது.

ஆனால் முதல் தடுப்பூசி கூட ஏற்றப்படாத நிலையில் தினம் தினம் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை காணப்படுகின்றது.

மேலும் மலையக தோட்டப்புறங்களிலும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில் தடுப்பூசி ஏற்றாமல் தோட்டத்தொழிலுக்கு கூட செல்வதற்கு அச்சமாக உள்ளது.கடந்தவாரம் தடுப்பூசி ஏற்றப்படுவதாக கூறி வரவழைக்கப்பட்டு ஏமாற்றத்துடனேயே திரும்பினோம்.

எனவே இனியாவது எம்மை புறக்கணிக்காமல் விரைந்து தடுப்பூசிகளை ஏற்றுமாறு மடக்கும்புர மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பகுதி கிராமசேவகர் குறிப்பிடுகின்ற போது கடந்தவாரம் தடுப்பூசி பற்றாக்குறையால் செலுத்தமுடியாமல் போய்விட்டது.மறுபடி ஏற்றுவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை.

அவ்வாறு ஏற்றும் பட்சத்தில் முதல் அங்கிகாரம் கொடுத்து மடக்கும்புர மக்களுக்கு முதலாவது தடுப்பூசி ஏற்றப்படும் என குறிப்பிட்டார்.

இதுவரை மடக்கும்புர தோட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு முதல் தடுப்பூசி ஏற்றப்படாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை மத்திய மாகாணத்தின் பெருமளவிலான பிரதேசங்களில் ரஷ்யாவின் ஸ்புட்னிக்-05 ரகத்திலான தடுப்பூசி அளிக்கப்பட்ட போதிலும் இரண்டாவது தடுப்பூசி இதுவரை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like