ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்திய ஜீவன்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கும், தமிழக முதலமைச்சர் M.K.ஸ்டாலினுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சரை நேற்று (01) சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் செரிந்து வாழும் மலையகத்திற்கும் இடையிலான இருதரப்பு பரஸ்பர உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், மலையகத்திற்கான அபிவிருத்திகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும், நீண்ட நாள் அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில் மலையகத்திற்கான தனியான பல்கலைகழகம் அமைப்பதற்கான அனுமதியை இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ளமையை தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மலையகத்தில் அமையவுள்ள பல்கலைகழகத்திற்கும்,
தமிழ்நாட்டின் அரசாங்கத்திற்கும் உறவை வளர்த்துக்கொள்வது தொடர்பாகவும் இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து தமிழ் நாட்டில் வாழும் இலங்கை தமிழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்வதற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் M.K. ஸ்டாலின் அண்மையில் இந்திய சட்டபேரவையில் அறிவித்திருந்தமை குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு வீடமைப்பு, கல்வி, தொழில் வாய்ப்புகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள், தொடர்பான நலத்திட்டங்களை அவர் அறிவித்திருந்த நிலையில், அதற்கு தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தான் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோர், தமிழ் நாட்டின் திராவிட முன்னேற்ற கழகத்தின் மறைந்த தலைவர் கலைஞர் முத்துவேல் கருணாநிதியுடன் பேணி வந்த உறவு மற்றும் தற்போதைய முதலமைச்சர் M.K.ஸ்டாலினுடன் பேணி வரும் நெருக்கமான உறவு தொடர்பிலும் இச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் இந்திய வம்சாவளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கும் திராவிட முன்னேற்ற கழகத்திற்கும் இடையிலான உறவு நீடிப்பது குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

You May also like