நீதிமன்றில் நுழைந்து ரிஸாட்டிற்கு அருகே இருந்த மர்மநபர் யார்?

மலையகத் தமிழ்ச் சிறுமி இஷாலினியின் மர்ம மரணம் தொடர்பிலான வழக்கு இன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சந்தேக நபரான நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியூதீனுக்கு அருகே அமர்ந்திருந்த நபர் பற்றி நீதிமன்றத்தில் அரச தரப்பு சட்டத்தரணியால் சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இவ் வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.

ரிஷாட் பதியூதின் உள்ளிட்ட வழக்கில் சந்தேக நபர்கள் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் மன்றில் விசேட கூற்று ஒன்றை முன்வைத்த பிரதி சொலிசிடர் ஜெனரல் திலீப்ப பீரிஸ், இந்த நீதிமன்ற விசாரணைப் பிரிவில் மர்ம நபர் ஒருவர் அமர்ந்திருப்பதாகவும், கடந்த அனைத்து வழக்கு விசாரணைகளின்போதும் அவர் வாதப்பிரதிவாதங்களை குரல் பதிவு செய்துகொண்டதாகவும் முறையிட்டார்.

மேலும் குறித்த நபர் தன்னை ஊடகவியலாளர் என அடையாளப்படுத்திக்கொண்டு மன்றிற்குப் பிரவேசித்திருப்பதாகவும் பிரதி சொலிசிடர் ஜெனரல் நீதிமன்றில் குறிப்பிட்டார்.

குறிப்பாக ரிஸாட் பதியூதீனுக்குப் பக்கத்து ஆசனத்தில் அவர் அமர்ந்திருந்ததாகவும் சட்டத்தரணி கூறினார்.

இதுகுறித்து கவனம் செலுத்திய நீதவான், குறித்த நபரது ஊடக அடையாள அட்டையின் உண்மைத்தன்மை பற்றி ஆராய்ந்து பார்க்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்ததோடு, அந்நபர் பற்றி சந்தேகம் இருப்பின் முறையிட்டால் அதற்கான விசாரணையை பொலிஸார் நடத்தும்படியும் உத்தரவு பிறப்பித்தார்.

எவ்வாறாயினும் குறித்த நபர் பர்சான் அமீர் என்பவர் என்று கூறப்படுகின்றது.

You May also like