அரசியல் மீது நம்பிக்கை இழக்கிறது-ரணில்

இலங்கை மக்களிடையே அரசியல் மீதான நம்பிக்கை சரியத் தொடங்கிவிட்டதாக முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார்.

காணொளி முறைமை ஊடாக இளைஞர்களுடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முன்னாள் நிறைவேற்று அதிகாரமுடைய  ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவரதன அரசியல், பொருளாதாரம், கல்வி, சுற்றுலாத்துறை , தகவல் தொழில்நுட்பம், மற்றும் விவசாயம் என பல துறைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.இவரது ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அபிவிருத்திகள் இன்றும் தொடர்கிறது.

திறந்த பொருளாதார கொள்கையினையுடைய சீனா , இந்தியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்துள்ளன. இந்நாடுகளில் அரச தலைவர்கள் மாற்றமடைந்துள்ளார்கள். ஆனால் பொருளாதார கொள்கை ஒருபோதும் மாற்றமடையவில்லை.  ஆட்சி மாற்றம் பெறும் போது  பொருளாதார கொள்கை மாற்றமடைந்தால் ஒருபோதும் பொருளாதார ரீதியில் முன்னேற்றடைய முடியாது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் பெறும் போது பொருளாதார கொள்கையும் மாற்றமடைகிறது. இதுவே பொருளாதார  பாதிப்பிற்கு  பிரதான  காரணியாக உள்ளது. தற்போது அமுலில் உள்ள திறந்த பொருளாதார கொள்கையிலும் ஒரு சில மட்டுப்பாடுகள் காணப்படுகின்றன. மட்டுப்பாடுகளை தளர்த்தினால் பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.

பொருளாதாரம்,சுகாதாரம், கல்வி, அரசியல், ஜனநாயகம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாடு  பாரிய நெருக்கடிகளை எதிர்க் கொண்டுள்ளது.இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.நாட்டை விட்டு வெளியேறலாமா என்ற நிலைப்பாட்டில் இளைஞர்கள் உள்ளார்கள்.இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படும். நாட்டை முன்னேற்றும் பொறுப்பை இளைஞர்கள் வசம் ஒப்படைக்க வேண்டும்.

தற்போதைய அரசியல் நிலைமையை மக்கள் அடியோடு வெறுக்கிறார்கள்.உண்மையான  மற்றும் நிலையான கொள்கையுடைய  அரசாங்கத்தை தோற்றுவிக்க எண்ணுகிறார்கள். இதன் காரணமாகவே ஐக்கிய தேசிய கட்சி முழுமையாக மாற்றமடைந்துள்ளது. பொருளாதாரம், சுகாதாரம், ஜனநாயகம் மற்றும் சுற்றுசூழல் உள்ளிட்ட பிரதான விடயங்களை கொண்ட குறுகிய காலத்திட்டத்தை ஐக்கிய தேசிய கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியவர்களையும், எதிர்க்கட்சிக்கு ஆதரவு வழங்கியவர்களையும் ஒன்றினைத்து அரசியலில் மாற்றம் ஏற்படுத்த எம்மால் முடியும்.பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களை குறுகிய காலத்திட்டத்திற்கமைய  சரி செய்தால் நாட்டை 20 வருட காலத்திற்குள் முன்னேற்றமடைய செய்ய முடியும் என்றார்.

You May also like