கொழும்பின் முக்கியத்துவம் வாய்ந்த 03 நிலங்கள் 99 வருட குத்தகைக்கு!

கொழும்பிலுள்ள 03 முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களை 99 வருடங்களுக்குக் குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
99 வருட குத்தகை அடிப்படையில் முதலீட்டுத் திட்டங்களுக்காகக் கொழும்பு நகரத்தில் மேலும் மூன்று முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களை  முதலீட்டாளர்களுக்கு வழங்க நகர அபிவிருத்தி அதிகார சபை அழைப்பு விடுத்துள்ளது.

அந்தச் சபை இதற்கான விளம்பரங்களை செப்டெம்பர் 19 ஆம் திகதி அன்று வெளியிட்டுள்ளது என்று அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.
கலப்பு அபிவிருத்தித் திட்டங்களுக்காக கொழும்பு டி.ஆர் விஜேவர்தன மாவத்தையில் 03 இடங்களை வழங்குவதற்காகக் குத்தகை கோரப்பட்டுள்ளது.
அதன்படி கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள 3 காணிகளுக்கு இவ்வாறு விலை மனு கோரப் பட்டுள்ளது. பத்திரிகைகளில் வெளியான அறிக்கைக்கு அமைய, கொழும்பு 10 டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையின் இலக்கம் 12இல் அமைந்துள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபம் அமைந்துள்ள இடம், இலக்கம் 38இல்  மக்கள் வங்கிக் கிளை அமைந்துள்ள இடம் மற்றும் இலக்கம் 40இல் அமைந்துள்ள சதொச களஞ்சிய அறை வளாகம் அமைந்துள்ள இடம் ஆகியவற்றை இந்தத் திட்டத்திற்காக வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபம் அமைந்துள்ள இடத்தின் குத்தகைப் பெறுமதி 3.7 பில்லியன் ரூபாவாகும். மக்கள் வங்கி கிளை அமைந்துள்ள இடத்தின் குத்தகைப் பெறுமதி 1.3 பில்லியன் ரூபாவாகும்.
சதொச களஞ்சிய அறை வளாகம் அமைந்துள்ள இடத்தின் குத்தகைப் பெறுமதி 1.6 பில்லியன் ரூபாவாகும்.
இந்த நிலங்களில் செயற்படுத்தப்படும் திட்டங்களுக்கான முன் மொழிவுகளைச் சமர்ப்பிக்க ஒரு மாதம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கொழும்பு வெளிவிவகார அமைச்சின் கட்டிடம் செலெண் டிவா முதலீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ளது. ஹில்டன் மற்றும் கிராண்ட் ஓரியண்டல் ஹோட்டல் உள்ளிட்ட பல மதிப்புமிக்க சொத்துக்களை முதலீட்டுத் திட்டங்களுக்காக வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

You May also like