மாலைதீவுக்கு மணல் ஏற்றுமதி-அமைச்சர் வழங்கிய பதில்

மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமாக மணல் ஏற்றுமதி செய்யப்பட்டு மாலைதீவில் புறம்பான ஒரு தீவு அமைக்கப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு முன்வைத்த குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென்று அரசாங்கம் தெரிவிக்கின்றது.

நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை உரையாற்றிய சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் உரையாற்றியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனினால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் உள்நாட்டில் மணல் தேவைப்பாடு அதிகமாக இருக்கின்ற நிலையில் வெளிநாட்டிற்கு எந்த வகையிலும் மணல் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

அதேபோல எமது நாட்டின் பெற்றோலிய வளங்களில் இல்மனைட், சிலிக்கா உள்ளிட்ட கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அவை ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அதிக விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக சாணக்கியன் எம்.பிக்கு எனது பதில் திருப்தியளிக்கவில்லை என்றால் மேலதிக தகவல்களை அறிந்துகொள்ளலாம் எனவும் அமைச்சர் ஆலோசனை கூறினார்.

You May also like