ஞானசார மீது விசாரணை வேண்டும்-SLPP வலியுறுத்து!

நாட்டில் இன்னுமொரு தீவிரவாத தாக்குதலை நடத்த அடிப்படைவாத பிரிவினர் திட்டமிட்டு வருவதாக தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மீது விசாரணை தேவையென ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவிக்கின்றது.

கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் பேசிய அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான டிலான் பெரேரா, இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர்

“எமது ஞானசார தேரர், இரண்டு தொலைக்காட்சிகளில் வெளியிட்ட கருத்தில், இன்னுமொரு சஹ்ரான் தாக்குதலான்று நடத்தப்படலாம் என்று தெரிவித்திருந்தார். இது மிகவும் பாரதூரமான கருத்து. முதலாவது தாக்குதல் இடம்பெற்றதையும் அவர் கூறியிருந்தார். ஊடகங்களில் ஞானசார தேரரை கடுமையாகவும் சாடியிருக்கின்றேன். அவர் என்னை மிருகம் என்றும் கூறியிருந்தார். இருப்பினும் சஹ்ரான் பற்றி அவர் தெரிவித்த கருத்து பற்றி விசாரணை அவசியம். இன்னுமொரு இனவாத பிரிவுக்கே இது வழிவகுகின்றது.

ஞானசார தேரர் அப்படி தெரிவிக்கையில், மற்றுமொரு பௌத்த தேரர்தான் ஹலால் பிரச்சினையை ஏற்படுத்தி சிங்கள – முஸ்லிம் மோதலுக்கு வழிவகுத்தவர். இன்று சிங்கள கத்தோலிக்க மக்களை பிரிவுக்கு உட்படுத்த இவ்விருவரும் முயற்சிக்கின்றனர். யார் முதலில் ஹலால் பிரச்சினையை ஏற்படுத்தியது? ஞானசார தேரர் கிடையாது. குறிப்பிட்ட ஒரு பிரஜைதான் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தூண்டினார். அதன் பின்னர்தான் சிங்கள – முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். இன்று மீண்டும் இவ்விருவரும் இணைந்து அதனையே தொடர்கின்றனர்.

ஒருபக்கம் ஞானசார தேரர், மற்றுமொரு தாக்குதலுக்கான திகதி தகவல் இருப்பதாக தெரிவித்தார். இந்நிலையில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். ஐ.ரி.என் நிழச்சி தொகுப்பாளரையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும். இந்த நிலையில் தாக்குதல் இடம்பெற்றதன் பின்னர் எம்மீதும் விரல்நீட்டுவார்கள். ஒருபக்கம் சிங்கள – முஸ்லிம் பிரச்சினை ஏற்படுகின்ற போது கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் – பௌத்த மக்களிடையேயான பிரச்சினையை அநாவசியமாக ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் ஒருமுறை கொள்ளுப்பிட்டி தேவாலயத்தில் ஒரு பேச்சு வார்த்தை நடந்ததாகவும், நாட்டில் மற்றுமொரு வகையிலான இனவாத பிரச்சினையை ஏற்படுத்த முனைவதாகவும் நான் தெரிவித்திருந்தேன்.

இந்நிலையில் நான் முன்னர் குறிப்பிட்ட தேரரும், நேற்று நாடாளுமன்றத்தில் வெற்றிலை சாப்பிடுபவர்களை இகழ்ந்த நபரும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். இன,மத,மொழி என பிரித்து மீண்டும் நாட்டில் வன்முறையை ஏற்படுத்துகின்றனர். அதன் நோக்கம் அவர்களின் அரசியலாகும்” என்றார்.

You May also like