எந்த சந்தர்ப்பத்திலும் மற்றுமொரு கோவிட் அலை உருவாகலாம்?

அரசாங்கத்தின் மோசமான சுகாதார முகாமைத்துவம் காரணமாக எந்த சந்தர்ப்பத்திலும் மற்றுமொரு கொரோனா அலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அரச தாதியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையிலே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனா மரணங்கள் குறைவடைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றபோதும், இந்த அபாய நிலைமை தொடர்ந்தும் நிலவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தமது உயிரை பணயம் வைக்கும் சுகாதார பணியாளர்களின் நிவாரண கொடுப்பனவு குறைக்கப்பட்டுள்ளாதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான ஒத்துழைப்புகளை அரசாங்கம் வழங்காத நிலையில், அதனை சுட்டிக்காட்டி எதிர்வரும் 27 ஆம் திகதி பாரிய தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சமன் ரத்னபிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது கொரோனா தொற்றினால் வீடுகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இந்த நிலைமையானது நாட்டுக்கு ஆரோக்கியமான விடயமல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், உரிய முறையில் பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன், நாட்டின் உண்மை நிலைமையினை உணர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் அரச தாதியர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

 

You May also like