வடகடலில் மூழ்கிய தமிழக மீனவரை தேடும் பணிகள் மும்முரம்

இலங்கையின் வடக்கு கடற்பிரதேசத்தில் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான கப்பலில் மோதிய நிலையில் காணாமற்போன தமிழக மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக இலங்கைக் கடற்படையின் பேச்சாளர் இந்திக்க டி சில்வா Tamil.Truenews.lk இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

தமிழகம் – புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப் பட்டினத்தில் இருந்து சுமார் 118 விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றனர்.

இதில் ராஜேஸ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் ராஜ்கிரன், சுகந்தன், சேவியர் ஆகிய மூன்று மீனவர்கள் இலங்கை காரைநகர்  கடற்பிரதேசத்திற்கு அருகில் வைத்து ஆபத்தில் சிக்கினர்.

இலங்கை கடற்படைக் கப்பலுடன் இவர்களது படகு மோதியதில் மூன்று மீனவர்களும் கடலில் மூழ்கியதைத் தொடர்ந்து அவர்களில் இருவர் காப்பாற்றப்பட்டிருக்கின்றனர்.

குறித்த மீனவர்கள் இருவரும் தற்போது பாதுகாப்பாக கரைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த படகும் கரைக்கு இழுத்துவரப்பட்டுள்ளது.

மேலும் இவர்களை இந்திய கடற்படையினரிடம் ஒப்படைப்பதற்கு பேச்சு நடத்தப்பட்டிருக்கின்றது. காணாமற் போன மற்றைய மீனவரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

You May also like