மஹிந்தவிடம் நாட்டை ஒப்படைக்குமாறு கோட்டாவிடம் கேட்டார் தேரர்

கோட்டாபய ராஜபக்சவின் சுபீட்ச நோக்குடன் நாடு மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்று நினைத்தாலும், 200சதவீத மக்கள் இப்போது அரசாங்கத்தால் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக்கு வர வேண்டும் எனவும் தேசத்தின் பாதுகாப்புக்கான மக்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டாளர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டிய அபயராமயவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

மேலும், கோட்டாபய ராஜபக்ஸ தொடர்ந்தும் ஜனாதிபதியாக பதவி வகித்தாலும் நாட்டை கட்டியெழுப்ப அனுபவமிக்க மகிந்தராஜபக்ச அவசியம். மகிந்த ராஜபக்சவால் மட்டுமே நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

இரசாயன உர இறக்குமதி தடையால் நாட்டினுடைய விவசாய நடவடிக்கைகள் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. தான்தோன்றித்தனமான முடிவே இதற்கு காரணம்.

மஹிந்த ராஜபக்ஸவை நம்பியே 69 லட்சம் மக்கள் வாக்களித்தனர், அதனால் நாட்டை பாதுகாக்க நினைத்தால் மகிந்த ராஜபக்ச அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக நாலா பக்கங்களிலும் இருந்து எதிர்ப்புகள் வலுப்பெறுவதற்கு முன்னர், மகிந்த ராஜபக்ச ஆட்சி அதிகாரத்தை பெற வேண்டும். நான் கட்டிய வீட்டில் உள்ள குறைபாடுகளை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

You May also like