நடேசனினால் எம்.பி ஒருவருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்

நடேசன் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு நபரொருவர் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

இன்று (21) பாராளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒக்டோபர் 12ஆம் திகதி இரவு 12.33 மணியளவில் தனது கைபேசிக்கு தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு “நீங்கள் சமிந்த விஜேசிறி எம்.பியா” என கேட்டுவிட்டு “பென்டோரா பேப்பர்ஸ் விவகாரம் தொடர்பில் உங்கள் உரை நன்றாக இருந்தது, எதிர்காலத்தில் சந்திப்போம்” என்று கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டித்ததாக சமிந்த விஜேசிறி தெரிவித்தார்.

இந்த அழைப்பின் காரணமாக தனக்கு ஏதாவது உயிர் அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதை அந்த உரையாடலின் போது தான் உணர்த்தாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மிரிஹானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்ததை சுட்டிக்காட்டிய அவர், எவ்வாறாயினும் இந்த சம்பவம் குறித்து இதுவரையில் தன்னிடம் விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.

இது குறித்து பொலிஸ் உடனடி விசாரணைகளை நடத்தாமை தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்த வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

You May also like