மீண்டும் வைரஸ் எப்படி பரவியது; குழப்பம் நீடிக்கிறது

இலங்கையில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை தாக்கத்தின் மூலம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் புலனாய்வுப் பிரிவினரும், சுகாதார அதிகாரிகளும் இணைந்து வைரஸ் எவ்வாறு பரவியது என்பதை கண்டறியும் கூட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த திவுலப்பிட்டிய பகுதி பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து அத்தொழிற்சாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசீஆர் பரிசோதனையில் பலருக்கு வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டது.  அவர்களுடன் நெருங்கி பழகியவர்களுக்கும் வைரஸ் பரவியுள்ளது.

இதன்படி மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை கொரோனா கொத்தணி பரவல்மூலம் நாட்டில் இன்று (11) காலைவரை ஆயிரத்து நூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளமை பீசீஆர் பரிசோதனைமூலம் கண்டறியப்பட்டுள்ளது. நேற்று (10) மாத்திரம் 4 ஆயிரத்து 754 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திவுலப்பிட்டிய பெண்ணுக்கு எவ்வாறு வைரஸ் தொற்றியது என்பது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.இந்நிலையில்  இது தொடர்பில் இராணுவத்தளபதியிடம் வினவியபோது,

” திவுலப்பிட்டிய பெண் காய்ச்சால் காரணமாக 30 ஆம் திகதியே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அத்தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர்கள் சிலருக்கு 21 ஆம் திகதி முதலே இருமல், தடிமல் போன்ற நோய் அறிகுறிகள் இருந்துள்ளன என்று தொழிற்சாலையின் வைத்திய பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கும், மற்றையவர்களுக்கு தொற்றாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதுமே எமது பிரதான பணியாக இருக்கின்றது. வைரஸ் தொற்றின்மூலம் இன்னும் உரியவகையில் கண்டறியப்படவில்லை.” – என்றார்.

 

You May also like